கேரளாவில் உண்மையான சமூகநீதி மலர்கிறது- டாக்டர் ராமதாஸ்

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கேரளத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ளலாம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இட ஒதுக்கீடு என்பது எப்போதும் ஒரே திடமாக மாறாமல் இருப்பது சமூகநீதியல்ல. இதை கேரளம் சரியாக புரிந்துக்கொண்டு அவ்வப்போது இடஒதுக்கீட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. அதன்மூலம் அங்கு உண்மையான சமூகநீதி மலர்கிறது.

கேரளத்தில் ஏதேனும் ஒரு சாதியின் மக்கள் தொகை இரு விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தால் அவர்களுக்கு தனிப்பிரிவாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கும் குறைவாக மக்கள்தொகை கொண்ட சாதிகளை மட்டும் இணைத்து 3 சதவீதம் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கேரளத்தில் இந்த 8 பிரிவு இடஒதுக்கீடுகளும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதுதான்.

பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு தனியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால்தான் கேரளத்தில் அனைத்து சாதிகளுக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்கிறது. ஆக, இன்றைய சூழலில் சமூகநீதியின் சொர்க்கம் கேரளம்தான். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கேரளத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ளலாம் என அவர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.