தாய்லாந்தில் கடல் உணவு மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காக். இங்கு லாம்கேட் கடல் உணவு உணவகம் என்ற உணவகம் செயல்பட்டு வந்தது. இங்குள்ள விதவிதமான கடல் உணவுகள் பிரபலமானவை. மக்கள் விரும்பி இங்கு வந்து சாப்பிடுவர். இந்நிலையில் வியாபாரத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்ய உணவக உரிமையாளர்கள் ஒரு திட்டத்தை தீட்டினர்.

அதன்படி, 10 பேருக்கு கடல் உணவு வழங்குவதற்கு 28 டாலர் தொகையை முன்கூட்டியே செலுத்தி வவுச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு வரிசைப்படி உணவு வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த திட்டம் வழக்கமான விலையை விட குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் அலைமோதினர். மக்கள் அனைவரும் போட்டி போட்டு தொகையை செலுத்தி பதிவு செய்து வவுச்சர்களை வாங்கினர். இவ்வாறாக பல்லாயிரகணக்கானோர் பணம் செலுத்தி வவுச்சர் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 1.6 மில்லியன் டாலர் தொகையை அந்த உணவகம் சுருட்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 கோடி ஆகும். தொடக்கத்தில் வவுச்சர் பெற்றிருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் பதிவு செய்தவர்களுக்கு கடல் உணவு பரிமாற பல மாதங்கள் ஆகும் என்ற நிலை உருவானது. அனைத்து வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய கடல்வாழ் உயிரினங்கள் கிடைக்கவில்லை என அறிவித்து, இந்த உணவகம் கடந்த மார்ச் மாதம் திடீரென மூடப்பட்டது.

இதுகுறித்து 818 வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பின் அந்த உணவகத்தின் உரிமையாளர்களான அப்பிசார்ட் போவர்ன்பஞ்சரக்கையும், பிரபாசோர்ன் போவர்ன்பஞ்சாவும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பாங்காக் கோர்ட்டில் நடைபெற்றபோது, அவர்கள் இருவருக்கும் தலா 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டதால்,தண்டனைக்காலம் பாதியாக, 723 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் அந்த நாட்டு சட்டப்படி உண்மையிலேயே தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தாலே போதுமானது.