கொரோனா வைரசின் மரபணு மாற்றம் குறித்து அமீரக அரசு செய்தி தொடர்பாளர் அறிவிப்பு

உலகில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தொடங்கியதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசின் மரபணு மாற்றம் குறித்து நேற்று அமீரக அரசு செய்தி தொடர்பாளர் டாக்டர் ஒமர் அப்துல்ரஹ்மான் அல் ஹம்மாதி அளித்த பேட்டியில், உலகில் பரவி வரும் கொரோனா வைரசில் சில மரபணு மாற்றம் நிகழ்ந்து புதிய வகை வைரசாக மாற்றமடைந்து அதிவேகமாக சில பிரதேசங்களில் பரவி வருகிறது.

இது குறித்து தற்போது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வகங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் புதிய மாற்றமடைந்த வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள புதிய வைரஸ் தொற்றை மனித நோய் எதிர்ப்புத்திறன் அதிக அளவில் திறனுடன் எதிர்கொள்வதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர், அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கையுடன் வருகை தந்து தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதாவது நோய் தொற்று அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். புதிய வகை கொரோனா தொற்று குறித்து பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பிலும் இருந்து வருகிறது. இதனை விளக்கும் வகையில் இந்த விளக்கம் தரப்படுகிறது.

குறிப்பாக மியூட்டேஷன் எனப்படுவது இனப்பெருக்கத்தின்போது வைரசின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றமாகும். இது புதிய வகை வைரசை உருவாக்கும். தற்போது மரபணு மாற்றத்தில் 3 வகையில் இந்த வைரஸ் மாற்றமடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இது வைரசை வலுவிழக்கக்கூட செய்யலாம் அல்லது திறனை கூட்ட செய்யலாம். எனவே இது குறித்த தவறான தகவல்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம். தடுப்பூசியால் இந்த வகையை எதிர்கொள்ள முடியும் என்று கூறினார்.