மும்பையில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள், ரயில் சேவைகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.நாட்டிலே கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலமாக மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அதன்பின் அவர் பேட்டி அளித்தபோது, நாம் தற்போது வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டும். வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நமக்கு உள்ளது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் எனவும், சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பலர் பயணம் செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்போது உடனிருந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார்,நிசர்கா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், பயிர்நாசம் அடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக கூறினார்.