மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் வலி மற்றும் உடல் சோர்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமித்ஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து, குர்கான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், கரோனா தொற்றில் இருந்து அவர் குணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சில நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களிலும் அமித்ஷா பங்கேற்கவில்லை. தன்னுடைய வீட்டிலேயே இருந்து தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருப்பதாக அமித்ஷா தொடர்ந்து கூறி வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 3, 4 நாட்களாக தனக்கு உடல் நோர்வு உள்ளதாகவும் உடல் வலி இருப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளியாகியுள்ளது. அவர் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே தன் பணிகளை செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.