முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு... பொருளாதாரத்தில் தடுமாறும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மார்ச் நுகர்வோர் விலைக் குறியீடு 35.37% அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு என பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைந்து இறக்குமதி குறைவதால் பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமின்றி அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையும் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் பணவீக்கம் குறித்த அறிக்கையை அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான அரிஃப் ஹபீப் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 35.37% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 31.60% ஆகவும், ஜனவரியில் 27.60% ஆகவும் இருந்தது. 1965 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புள்ளிவிவரங்களின்படி, மார்ச் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும்.

உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 34.6% ஆகவும், வீட்டு வாடகை பணவீக்கம் 23.60% ஆகவும், ஆடை மற்றும் காலணி பணவீக்கம் 8.60% ஆகவும் இருந்தது. உணவுப் பணவீக்கம் கடந்த ஆண்டை விட 47 சதவீதம் உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை பணவீக்கம் 17.50 சதவீதமும், ஆடை மற்றும் காலணி பணவீக்கம் 21.90 சதவீதமும், போக்குவரத்து பணவீக்கம் 54.94 சதவீதமும் அதிகரித்துள்ளது.

நாட்டில் கடும் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதால், நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் கோதுமை விநியோகிக்கப்படுகிறது. இதை பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் கடந்த மாதத்தில் மட்டும் 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.