ஹத்ராஸ் பாலியல் சம்பவம் தொடர்பாக உ.பி. அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19வயது பெண் கடந்த மாதம் 14-ந் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கிராமத்தை சேர்ந்த உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் அவர் தூக்கி செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்த அந்த பெண்ணை ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பலியானார்.

இந்நிலையில் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர் பிறகு அவர்களை விடுதலை செய்தனர். தற்போது, இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அக்டோபர் 12-ம் தேதிக்குள் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விளக்கமளிக்க மாநில உள்துறை, காவல்துறை மற்றும் ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.