நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்... கரூர் மாநகராட்சி ஆணையர் தகவல்

கரூர்: கரூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் வேலைகள் முடித்து சவுக்கு கம்புகள் மற்றும் பலகைகளை பிரிப்பதற்காக உள்ளே இறங்கிய போது நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக உயிரிழந்த தொழிலாளர்களில் இரண்டு பேர் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய பட்டியல் இன ஆணையம் நேரில் விசாரணை மேற்கொண்டது. மேலும், தமிழக அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும், கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.