கொரோனா பாதிப்பால் நடப்பாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்தது

அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்தது... கொரோனா நோய்த் தொற்றால் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் 5 ஆண்டுகளின் வளர்ச்சி இல்லாமல் போய்விட்டது.

கொரோனா தொற்றால் உலக அளவில் பொருளாதாரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க பொருளாதார சூழ்நிலை பற்றிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

2020-ன் இரண்டாம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சரக்குகள் மற்றும் சேவைகள் உற்பத்தி, சுமார் 9.5 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மக்கள் செலவினங்களைக் குறைத்தல், வணிக முதலீடுகள் இல்லாமை, உலக பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும், இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் வீழ்ச்சியானது ஐந்து ஆண்டு கால வளர்ச்சிக் குலைவுக்கு இணையானது என்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

ஓர் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிட, இந்த வீழ்ச்சி 32.9 சதவிகிதத்துக்கு இணையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முதல் காலாண்டான ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் வீழ்ச்சியின் அளவு 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது.

மேலும், பொருளாதாரம் நிலைகுலைந்ததன் காரணமாக கடந்த வாரம் சுமார் 14 லட்சம் பேர், வேலையின்மைக்கான நிதி உதவி கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று, வேலையின்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலும் 8.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வைரஸ் பரவல் குறைந்தாலும் மீண்டும் பொருளாதாரத்தை மீட்கும் வழிகள் தெரியாமல் நாடுகள் குழம்பிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.