மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்... மக்களுக்கு உக்ரைன்அரசு அறிவுறுத்தல்

கிவ்: உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷ்யா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அங்குள்ள மின்கம்பிகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்யா கிவ் நகரின் மீது சுமார் 70 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் பல இடங்களில் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கடும் குளிரால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தண்ணீர், மின்சாரம் இல்லாமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தலைநகர் கிவ் நகரில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ நேற்று தெரிவித்தார்.

மேலும் பாதிக்கபட்ட வீடுகளுக்கு மின் இணைப்பும் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளில் மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்றார். பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.