வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அனுமதி கிடையாது... பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த போராட்டமும், ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேல் யாத்திரைககான சுற்றுப் பயண விவரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த வேல் யாத்திரை நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இந்த யாத்திரை நடந்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், யாத்திரை நிறைவு பெறும் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி, தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த போராட்டமும், ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.