ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்... கல்வீச்சு நடத்தப்பட்டதால் பரபரப்பு

அயோத்தி: ஆடுகள் மீது மோதியதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் – லக்னோ இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகும் ரயில் சேவை தொடர்கிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நன்னு பஸ்வான் என்பவரின் ஆடுகள் ரெயில் தண்டவாளத்தில் புல் மேய்ந்து கொண்டு இருந்து உள்ளன. இதில், ரெயில் விரைவாக வந்து மோதி சென்றதில் சில ஆடுகள் உயிரிழந்து உள்ளன.

இதனால், ஆத்திரமடைந்த பஸ்வான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த வழியே சென்ற ரெயில் மீது நேற்று காலை 9 மணியளவில் கற்களை வீசி எறிந்து உள்ளனர். இதில், 2 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் பகுதியளவு பாதிப்படைந்து உள்ளன. சோஹாவால் பகுதி வழியே ரெயில் கடந்து சென்றபோது, இந்த சம்பவம் நடந்தது.

எனினும், லக்னோ நகரை ரெயில் சென்றடைந்தது. இந்த சம்பவத்தில் பஸ்வான், அவரது இரு மகன்களான அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.