உடல்நிலை காரணமாக சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுவரை இரண்டு முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006-ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அப்போது அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றிபெற்றார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. அப்போது ரிஷிவந்தியம் தொகுதியில் களம் இறங்கிய விஜயகாந்த் வெற்றிபெற்று எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நான்காவது முறையாக தே.மு.தி.க போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் விஜயகாந்த்தான் வசித்து வரும் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயகாந்தின் உடல்நிலை முன்புபோல் இல்லை. இதனை கருத்தில் கொண்டே தே.மு.தி.க.வினர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. பிரசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக தெரிகிறது.