விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்; மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறியுடன் இருப்பது தெரிந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. இதையடுத்து அவர், கணவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ள அதே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.