வரும் நவ.1ல் கிராம சபைக்கூட்டம் .. தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிப்பு

சென்னை: நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இக்கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இதையடுத்து இக்கிராம சபை கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படும்.

மேலும் குறிப்பிட்ட கிராம சபை கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

இந்த நிலையில் வருகிற நவ.1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை கூட்டம் நடத்தவும், கிராம சபைக்கூட்டங்களை மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.