விநாயகர் ஊர்வலம் .. சென்னையில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தினவிழா கடந்த 31ம் தேதி அன்று மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அனைத்து மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் பூஜைகளுக்காக வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து தற்போது விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சென்னையில் வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே.சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், இராயப்பேட்டை நெடுஞ்சாலை இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ்ரோடு, ஸ்மித் ரோடு அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக பாரிமுனைக்கு செல்லலாம். இதையடுத்து இந்த போக்குவரத்து மாற்றம் சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.