பெரு நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் ஆதரவாளர்கள் நடத்திய பேராட்டத்தில் வன்முறை

தென் அமெரிக்காவைச் சேர்ந்த, பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஸ்காரா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இதனால் அவரை பதவி நீக்குவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இதனையடுத்து சபாநாயகர் மானுவல் மெரினோ இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதனால் மார்டின் விஸ்காராவின் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். மார்டின் விஸ்காராவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் லிமாவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் பட்டாசுகளை கொளுத்தி வீசினர். கற்களை வீசியும் தாக்கினர்.

போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். தன் மீது எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விஸ்காரா மறுத்துள்ளார்.