உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையிலும் மேற்கு வங்கத்தில் வன்முறை

மேற்கு வங்கம்: வன்முறை சம்பவங்கள்... மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரர்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் தொடங்கிய சற்று நேரத்திலேயே முர்ஷிதாபாத், கூச் பேஹார் போன்ற பகுதியில் கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

தின்ஹடா பகுதியில் கள்ள ஓட்டுகள் போட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வாக்குப் பெட்டிக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர்.

கடும் வன்முறை தொடர்ந்து நிலவி வருவதையடுத்து பல இடங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தேர்தலில் 5.67 கோடி மக்கள், சுமார் 2.06 லட்சம் வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளனர். இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, வன்முறையில் காயமடைந்தவர்களை சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.