பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை... புதுச்சேரியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், நாளை 7 முதல் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6ம் தேதிக்குள் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, வரும் 7ம் தேதிக்குள் அந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும்.

இதன் காரணமாக, மே 7ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

மே 8 ஆம் தேதி இரவு முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 70 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். மே 10 முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் மற்றும் அவ்வப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புதுச்சேரி கடல் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் தவிர மற்ற படகுகளுக்கு ஏற்கனவே 61 நாட்கள் மீன்பிடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினங்களில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.