பாபநாசம் அணையின் நீர்மட்டம் 125 அடியாக உயர்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள அணைகள், குளங்கள் என நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை விட்டு விட்டு பெய்தது. அம்பையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டரும், பாளை, பாபநாசத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

அணை பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கி உள்ளது. பாபநாசத்தில் நேற்று 122 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியானது.

சேர்வலாறு அணை 3 அடி உயர்ந்து 143 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து 2,598.96 அடியாக உள்ளது. மணிமுத்தாறு நீர்மட்டம் 93.15 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 17 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1493 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வைப்பாறில் 98 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 42 மில்லிமீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பளங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. கோவில்பட்டி பகுதியில் பெய்த தொடர்ந்து மழை காரணமாக அத்தை கொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மாவட்டம் முழுவதும் 282.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.