புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளோம்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தயாராக உள்ளோம்... புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் இன்று (புதன்கிழமை) தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.

நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.