விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் - பிரதமர் மோடி


பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவித்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றியபோது, சில தலைவர்கள் விவசாயிகளின் போராட்டம் என்ற பெயரில் தங்கள் சொந்த அரசியல் சித்தாந்தத்தை முன்னெடுப்பதில் மும்முரமாக உள்ளனர். ஒப்பந்த விவசாயத்தில் விவசாயிகள் நுழைந்தால் நிலம் பறிக்கப்படும் என்று சிலர் கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்புகிறார்கள் என்று கூறினார்.

விவசாயிகளின் நிலம் குறித்து சிலர் கவலைப்படுகிறார்கள், நில அபகரிப்புக்காக ஊடகங்களில் யாருடைய பெயர்கள் வந்தன என்பது பற்றி நாம் அனைவரும் அறிவோம். நாங்கள் 1,000 க்கும் மேற்பட்ட மண்டிகளை ஆன்லைனில் இணைத்தோம். அங்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனர். முந்தைய அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகள் காரணமாக, ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறினர். விவசாயிகளின் இந்த நிலையை மாற்றுவது முக்கியம் இல்லையா? நாட்டின் பல பகுதிகளில், ஒப்பந்த வேளாண்மைக்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது பால்வளத் துறையில் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

மேலும் அவர், இன்று, ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருட்களுக்கு எங்கு சிறந்த விலை கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். விவசாயிகள் பயனடைகிறார்கள் என்றால் என்ன தவறு உள்ளது? விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.