நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம்; அமைச்சர் தகவல்

தேர்தல் பணியை அதிமுக தொடங்கி விட்டது... தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை அதிமுக தொடங்கிவிட்டது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் தீத்தாம்பட்டி ஊராட்சி தலைவர் பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது மற்றும் வேட்பாளர் குறித்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள். இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. வரும் 17-ம் தேதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ. வருகிறார்.

அதேபோல் 12-ம் தேதி ஜெ. பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு வருவாய் துறை அமைச்சரும், ஜெ. பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வருகை தர உள்ளார்.

களத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணியை தொடங்கிய முதல் கட்சியாக அதிமுக உள்ளது. அதேபோல் முதல் வெற்றியும் அதிமுகதான் பெறும், என்றார் அவர்.