சமூக தொற்றாக கொரோனா மாறுவதை தடுத்து விட்டோம்; நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

'சமூக தொற்றாக மாறுவதை தடுத்து, கொரோனாவை வீழ்த்திவிட்டோம். தற்போது ஒரே ஒரு கொரோனா நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்,'' என, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இங்கு ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐம்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், 1,500 பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டது. அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிந்தவுடன், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிகளை மதித்து மக்கள் பின்பற்றினர். இதனால், மே மாதத்தில் பெரும்பாலான நாட்களில் புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

கொரோனா சமூக தொற்றாக மாறுவதை முற்றிலும் தடுத்து அதை வீழ்த்திவிட்டோம். தற்போது, ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் எல்லைகளை திறக்கவும் முடிவு செய்துள்ளனர். 'பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்குள் வருபவர்களால் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என, வல்லுநர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், 'புதிய பாதிப்புகள் குறைந்துள்ளதால் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். அப்படிச் செய்தால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே, இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.