ரயில்வேயில் வேலை என்று கூறி போலி நியமன கடிதம் கொடுத்த பெண்ணுக்கு வலை

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து போலியான நியமனக் கடிதத்தை வழங்கிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி (33), அதே பகுதியில், ‘பியூட்டி பார்லர்’ நடத்தி வருகிறார். பார்லர் வாடிக்கையாளரான அதே பகுதியைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணுடன் ரேணுகாதேவிக்கு நட்பு ஏற்பட்டது.

தனது தந்தை ரயில்வேயில் உயர் அதிகாரி என்றும், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகவும் அனுஷா கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ரேணுகாதேவி மற்றும் அவரது தோழி கற்பகம் ஆகியோர், அனுஷா மற்றும் அவரது தந்தையிடம் ரூ.12 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அனுஷா போலியான நியமனக் கடிதத்தை வழங்கினார். இதுகுறித்து ரேணுகா விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர்.