ஊழலை பற்றி பேச திமுகவுக்கும் என்ன தகுதி உள்ளது - அமித்ஷா கேள்வி


பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். அவரை தமிழக முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அதிமுக, பாஜக தொண்டர்கள் வரவேற்றனர். மேலும் பாஜக தொண்டர்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அதன்பின், சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா காங்கிரஸ், திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்போது அமித்ஷா பேசுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், ஊழலை பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் என்ன தகுதி உள்ளது? குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஊழல் குற்றச்சாட்டை சொல்லும்முன் உங்கள் குடும்பத்தை திரும்பி பாருங்கள் என்று கூறினார்.