முகமது பைசல் பதவி தகுதி நீக்கத்தில் எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டது; உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கேள்வி... எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவர் தேர்தலின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக் என்பவரை, முகமது பைசல் சிலருடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முகமது பைசலை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் கடந்த ஜனவரி 23ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பைசலின் எம்பி பதவி தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜனவரி 25ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. ஆனால் பைசல் மீதான தகுதி நீக்கம் திரும்ப பெறப்படவில்லை. இதையடுத்து, முகமது பைசல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் பைசலின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்படுகிறது” என்று பைசல் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.