திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

எப்போது திரையரங்குகள் திறப்பு... திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மதுரையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அம்மா பேரவையின் சார்பில் கொரோனா தொற்று நோய் உள்ளவர்களுக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுக் கூடத்தை இன்று கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்மா கிச்சன் மூலம் முறையாக சத்தான உணவு நோயாளிகளுக்கு வழங்குவதாலே மதுரையில் கொரோனோ கட்டுக்குள் வந்துள்ளது. அடித்தட்டு மக்களுக்கு ஜெயலலிதா உருவாக்கிய அம்மா உணவகம் புகழ் பெற்றது போல் இந்த அம்மா கிச்சன் கடந்த 85 நாட்களுக்கு மேல் நோயாளிகளுக்கு உணவே மருந்தாக வழங்கி புகழ் சேர்த்து வருகிறது.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி 21,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்கு திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்னர் மருத்துவக் குழு அறிவுரையின் பேரில் உரிய நேரத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.