ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?...சிவசேனா எடுத்த முடிவு

மும்பை: சிவசேனா எடுத்த முடிவு... ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் கவுகாத்தியில் தங்கியிருந்தனர். இதனால், மாநில அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக பா.ஜ.,வின் பட்னாவிஸ் உள்ளார்.

இந்நிலையில், வரும் ஜனாதிபதி தேர்தல் வரும் 18 ம் தேதி நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.

இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து தனது கட்சி எம்.பி.,க்களுடன் சிவசேனா ஆலோசனை நடத்தினார். அப்போது, மொத்தமுள்ள 22 பேரில் 16 பேர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே, ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.