கொத்தவால்சாவடி மொத்த விற்பனை சந்தை மூடல்; மளிகை பொருட்கள் விலை உயர வாய்ப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

சென்னையில் கொரோனா பரவ கோயம்பேடு மற்றும் பல காய்கறி சந்தைகளே அதிகம் காரணம். இதனால் பரபரப்பான கொத்தவால்சாவடி மொத்த விற்பனை சந்தையும் கோயம்பேடு மார்க்கெட் போல கொரோனா பரவும் தலமாக அமைந்துவிடக்கூடாது என்று கருதிய மாநகராட்சி கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த விற்பனை கடைகள் அனைத்தையும் மூட முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடைகள் மூடுவது தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மொத்த விற்பனை கடைகள் அனைத்தையும் ஒரு வார காலம் மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த விற்பனை கடைகள் நேற்று மூடப்பட்டன. அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான மளிகை பொருட்கள், நொறுக்குத்தீனிகள், அப்பள வகைகள், எண்ணெய் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டன. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் கொத்தவால்சாவடி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொத்தவால்சாவடி சந்தை மூடப்பட்டு உள்ளதால் மளிகை பொருட்கள் விலை வரும் நாட்களில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதுடன், இருப்பில் உள்ள மளிகை பொருட்களும் சில்லரை விற்பனையால் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.