புரெவி புயல் தாக்கத்தால் தூத்துக்குடியில் பரவலாக கனமழை

புரெவி புயல் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6.00 மணிக்கு மாநகர பகுதிகளிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு 11.00 மணி வரை 5.00 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மணியாச்சியில் 160 மில்லிமீட்டரும், வைப்பாறில் 121 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

மழையால் நாகரில் வெற்றிவேல்புரம், லூர்தம்மாள்புரம், சாமுவேல்புரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை பொதுமக்கள் வெளியேற்றி வருகிறார்கள். பாளை மெயின் ரோட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோயாளிகள் தண்ணீரில் நடந்தே செல்கின்றனர்.


இதே போல் அண்ணாநகர் அரசு அலுவலர் குடியிருப்பு, நீதிபதிகள் குடியிருப்பு, பிரைண்ட்நகர், கதிர்வேல்நகர், ராஜீவ்நகர், பாரதிநகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கால்வெல் காலனி முதல் தெருசந்து பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த தண்ணீரால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்தது. இப்பகுதியில் மழைபெய்யும்போது ஒவ்வொரு முறையும் இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டேட்பாங்க் காலனி, கே.டி.சி. நகர், பாத்திமாநகர், முத்தையாபுரம், அத்திமரப்பட்டியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாநகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 143 ராட்சத மோட்டார் பம்புகள், 12 டேங்கர் லாரிகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.