புரெவி புயல் காரணமாக கடலூரில் பரவலாக மழை; வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிககனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், மஞ்சக்குப்பம், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுபட்டார பகுதிகளான தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, சாத்தமங்களம், குணமங்களம், சுத்துகுறிச்சி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4.00 மணி அளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது.

இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வியாசமணி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், மலைமேடு, பாணக்கார தெரு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்றுவட்டாரபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பெண்ணாடத்தில் கடை வீதி மற்றும் பஸ் நிலையம் திட்டக்குடி விருத் தாசலம் சாலையில் பொதுமக்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. தினந்தோறும் காலை 7.00 மணிக்கு வணிகர்கள் தங்களது வணிக நிறுவனங்களை திறப்பது வழக்கம் மழை காரணமாக 8.00 மணியாகியும் யாரும் கடைகளை திறக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கிய மழை நீரை அகற்ற வராததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை பொதுமக்களே சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.