முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது!

கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் மழைக்காலமாக உள்ளது. இதனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், முடிவடையும் காலத்திலும் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கடந்த மே மாத இறுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அத்துன் பருவ மழைக்காலம் நிறைவு பெற உள்ளது.

இதையொட்டி புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதை தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பக அரங்கில் வனத்துறையினருக்கு பயிற்சி நேற்று நடந்தது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய காலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 6 நாட்கள் நடக்கிறது. இதற்காக 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஏராளமான வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள் என்றனர்.