கர்நாடகத்தில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பா? - உண்மை பின்னணி என்ன ?

கர்நாடக மாநிலத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர, கோமெட்கே என்ற பெயரில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கோமெட்கே தேர்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொகுப்பு போன்றே இந்த தகவல் காட்சியளிக்கிறது. மேலும் இதேபோல், கர்நாடகாவில் சிஇடி தேர்வில் கலந்து கொண்டவர்களில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி நிறுவனம் வெளியிட்டதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய இணைய தேடல்களில் கோமெட்கே தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டது பற்றியோ, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது பற்றியோ எவ்வித தகவலும் இல்லை.

இதன் மூலம், கர்நாடக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது தெரிய வந்துவிட்டது. போலி செய்திகளால் சில சமயங்கள் விபரீதங்கள் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.