முன்னறிவிப்பு இன்றி ரத்தான விமானம், சிரமத்திற்கு ஆளான பயணிகள்

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து இன்று(திங்கள்கிழமை) மீண்டும் தொடங்கியது. இருப்பினும், போதிய பயணிகள் இல்லாததால் பல விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பேருந்து, ரயில், விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு பயணிகள் விமான சேவையை மே 25 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, போக்குவரத்து தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளும் பயணிகளுக்கு தனியாக சுகாதார நெறிமுறைகளை வெளியிட்டது.

இந்நிலையில், முதல் விமானம் இன்று காலை 4.45 மணியளவில் டெல்லியில் இருந்து புணேவுக்குப் புறப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் இன்று ஏராளமான பயணிகள் இல்லாததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக டெல்லி விமான நிலையத்தில் மட்டும் இன்று புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுபோல போதிய பயணிகள் இல்லாததால் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அதில் பயணிக்க விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், சென்னை, மும்பை, திருச்சி, தூத்துக்குடி, பெங்களூருஉள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் விமானச் சேவையைத் தொடங்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை.