பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் தொழிலாளர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று இலவச கொரோனா தனிமைபடுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஓட்டலை நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:- தற்போது உள்ள சூழலில் முழு தளர்வு என்பது சற்று கடினம் தான். இன்னும் மூன்று மாதங்களாவது இந்த நிலை தொடர்ந்தால் தான் கொரோனா தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியும். சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. முதல்-அமைச்சர் அறிவித்த அறிவிப்பே தொடரும்.

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது முறையான ஆவணங்கள் இருந்தால் அனுமதி வழங்கப்படும். சென்னைக்கு வந்ததும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்தி இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து இருந்தால் தான் அனுமதி வழங்கப்படும்.

தற்போது 2 நாட்களாக தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 500 முதல் ஆயிரம் வரை இ-பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது. வரக்கூடிய நாட்களில் விண்ணப்பங்களை பொறுத்து இ-பாஸ் அனுமதி எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.