தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடும் பாதிப்புக்கு உள்ளவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களே. அவர்கள் வேலையை இழந்தும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும், உணவு இல்லாமலும் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

விசாணையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்தது. இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.