உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவர், உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடலையும் குடும்பத்தினரின் ஒப்புதலின்றி போலீசாரே அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை பார்ப்பதற்கு அரசியல் கட்சியினர், ஊடகத்தினருக்கு தொடக்கத்தில் மாநில அரசு தடை விதித்து இருந்தது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.


எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கதாம்பூர் தொகுதியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் நேற்று மெய்நிகர் முறையில் யோகி ஆதித்யநாத் உரையாற்றுகையில், கொரோனா பரவலால் போடப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்களுக்கான உணவு, மருத்துவ உதவி அனைத்தையும் மாநில அரசு செய்ததுடன், அவர்கள் சுயமாக முன்னேறுவதற்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், ஆனால் பார்வையற்ற எதிர்க்கட்சிகள், தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களுக்கு எதுவும் செய்யாத அவர்கள், நாட்டின் அமைதியான சூழலை கெடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்கு சமீபத்திய சம்பவங்களே (ஹத்ராஸ் சம்பவம்) உதாரணமாக விளங்குகின்றன என்று தெரிவித்தார்.