சர்ச்சையில் சிக்கிய சொமோட்டோ..அதிக பணம் ..

தமிழ்நாடு: இந்தியா முழுவதும் மெட்ரோ நகரங்களில் துவங்கி தற்சமயம் மாநகராட்சிகள் வரை மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒரு விஷயம் ஆன்லைனில் சாப்பாடு வாங்கும் முறை. இதில் நாம் ஆர்டர் செய்தால் நமது வீட்டிற்கே கொண்டு வந்து தருவார்கள் என்பதால் பலரும் அதில் உணவு வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அவை உணவின் விலையோடு கூடுதல் வரி போட்டு நம்மிடம் வசூலிக்கும். ஆனால் உணவின் விலை உணவகத்தில் என்ன போட்டுள்ளதோ அதே விலையைதான் இவையும் காட்டும். சில ஆப்களில் இந்த விலை மாறுபடலாம். ஆனால் சொமோட்டோ ஆப்பில் ஆர்டர் செய்த நபர் ஒருவருக்கு அதிகமான அளவில் விலை வித்தியாசம் தெரிந்துள்ளது.. ராகுல் கப்ரா என்கிற மும்பையை சேர்ந்த நபர் செமோட்டோ மூலம் உணவுகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் த மோமோ பேக்டரி என்கிற உணவகத்தில் சொமோட்டோ மூலம் உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் மஸ்ரூம் மோமோ, வெஜ் ப்ளாக் பெப்பர் சாஸ், வெஜிடபில் ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இவை அனைத்தும் 690 ரூபாய் காட்டியுள்ளது. அதுவும் 75 ரூபாய் தள்ளுபடி போக இந்த விலை காட்டியுள்ளது.

இவை அனைத்தையும் அவர் நேரில் சென்று வாங்கலாம் என அந்த கடைக்கே நேரில் சென்று அதே மூன்று உணவுகளையும் வாங்கியுள்ளார். அப்போது அவை மூன்றும் சேர்த்து மொத்தம் 512 ரூபாய்தான் வந்துள்ளது. கிட்டத்தட்ட ஆப் மூலம் வாங்குவதற்கும் நேரில் சென்று வாங்குவதற்கும் இடையே 178 ரூபாய் வேறுபடுகிறது. ஒரு முறை உணவை ஆர்டர் செய்வதற்கு உணவின் விலையில் இருந்து 34.76 சதவீதம் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என அவர் கூறுகிறார்.

இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் பலரும் இது மிகவும் அதிக அளவிலான தொகை என கருத்து தெரிவித்து வருகின்றனர். 75 ரூபாய் தள்ளுப்படி செய்யவில்லை எனில் இன்னமும் அதிகமாக வந்திருக்கும். எனவே இந்த பிரச்சனையை அனைவரும் கவனிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.