வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபணம்

வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே பெண்கள் மனோதிடம், துணிச்சல், ஆன்மபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனப்பூர்வமான ஜோடியாக அவள், கணவரோடு இணையும்போது அவளது சக்தியும், ஆலோசனையும் கணவருக்கு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்.

இந்த உண்மையை இளைஞர்களிடம் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. புரிந்துகொண்டால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, மண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி விடுவார்கள். வாழ்க்கை என்பது பிரச்சினைகளை கடந்துவந்து வெற்றிகாண்பதுதான். பிரச்சினைகளை கடந்து வெற்றிபெறும்போதுதான் ஒவ்வொருவரிடமும் இருக்கும் முழு பலமும் தெரியும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆக முடியும். பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். திருமணமானாலும் இருக் கும். திருமணமாகாவிட்டாலும் இருக்கும்.

திருமணத்திற்கு பின்னால் வரும் பிரச்சினைகளை மனைவி உதவியோடு முறியடிக்கலாம் என்பது தான் புதிய செய்தி. திருமணத்திற்கு பின்னால் பலர் சாதனையாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற தொழிலதிபர் திருபாய் அம்பானி தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தில், தன் மனைவி கோகிலா தனக்கு கொடுத்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தோல்வியிலும் தன்னை தூக்கி நிறுத்திய கோகிலாதான் பின்பு தனக்கு கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பு கணவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மனைவிக்கு பெரும் பங்கு உள்ளது. அமிதாப்பச்சன், ஜெயபாதுரியை திருமணம் செய்த பின்பு வெற்றி சிகரத்தை தொட்டார். திருமணத்திற்கு பிறகுதான் ஷாருக்கான் படங்கள் சூப்பர் ஹிட் ஆயின. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுதான், இந்த தன்னம்பிக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட திருமணமான ஆண்கள் மிகுந்த தன்னம்பிக்கை யோடு வாழ்கிறார்கள். மனோபலத்துடன் இருக் கிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். ‘திருமணமானவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அர்த்தத்தோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.