சுற்றுலா வேட்கை தணிக்கும் அலிபாக் கடற்கரை!

மஹாரஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள அலிபாக் நகரம் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக சொல்லப்படுகிறது.

அலிபாக்கின் நான்கு எல்லைப்புறங்களில் மூன்று கடல் நீரினால் சூழப்பட்டுள்ளதால் பல அழகிய கடற்கரைகளை இது பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா கடற்கரைகளுமே தென்னை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும் காணப்படுவதால் ஒரு பாலைவனப்பிரதேச கடற்கரை போன்று வித்தியாசமான இயற்கை எழிலுடன் காட்சியளிக்கின்றன.

இயற்கை அதன் மிக அற்புதமான தோற்றத்துடன் களங்கமற்ற ஆதி அழகுடன் அலிபாக் கடற்கரையில் மிளிர்கிறது. இங்கு நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசற்ற தூய்மையுடன் காணப்படுகிறது. சுருக்கமாக அலிபாக் கடற்கரைகளை பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம். தன் கருப்பு நிற மணற்பரப்பால் உங்களை திகைப்பூட்டும் அலிபாக் கடற்கரை ஒரு புறமிருக்க, கிஹிம் பீச் மற்றும் நகவான் கடற்கரைகள் வெள்ளியைப்போல் ஒளிரும் வெள்ளை மணலால் பயணிகளைக் கவர்கின்றன. இவை தவிர அக்‌ஷி கடற்கரை என்று அழைக்கப்படும் மற்றொரு கடற்கரையும் இங்குள்ளது.

அலிபாக் ஒரு கடற்கரை நகரம் என்பதால் இங்கு கிடைக்கும் உணவு வகைகள் யாவுமே கடல் உணவு வகைகளாகவே உள்ளன. பாம்ஃபிரட் மற்றும் சுர்மை உணவுத்தயாரிப்புகளுடன் சொல் காதியும் இங்கு புகழ் பெற்ற உணவாக உள்ளது. நேசத்திற்குரிய துணையுடன் இன்பமாக, ஏகாந்தமாக தனிமையில் பொழுதைக் கழிப்பதற்கேற்ற இயற்கை ஸ்தலமாக அலிபாக் கடற்கரைப்பகுதி காணப்படுகிறது. பீச்சில் காலார நடப்பதற்கோ, கடலலைகளில் விளையாடுவதற்கோ அல்லது அமைதியாக சூரியன் கடலில் சென்று மறைவதை பார்த்து ரசிக்கவோ அலிபாக் பகுதி பொருத்தமான இடமாகும்.

அலிபாக் பகுதியில் எப்போதுமே விரும்பத்தக்க சிதோஷ்ண நிலை நிலவுகிறது. இங்கு அதிக உஷ்ணமோ அல்லது அதிக குளிரோ நிலவாமல் மிதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இந்தியாவின் மற்ற பிரதேசங்களைப் போன்று இங்கு கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுவதில்லை. கோடையில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 36°C மட்டுமே காணப்படுகிறது. மழைக்காலத்தில் இப்பிரதேசத்தின் அழகு ரசிக்கும்படியாக இருந்தாலும் சுற்றிப்பார்ப்பதற்கு சற்று சிரமமாக இருக்கலாம். இருப்பினும் அலிபாக் பகுதியை சுற்றிப்பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏற்ற காலம் என்றால் அது குளிர்காலம் தான். அச்சமயத்தில் சீதோஷ்ண நிலை மிக இதமாகவும் மிதமாகவும் சூழல் இனிமையாகவும் காணப்படுகிறது. இது உங்கள் பயண அனுபவத்தை மறக்க முடியாத மிகவும் இனிமையான அனுபவமாக மாற்றும். கொண்டாட்ட காலமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தருணங்களில் இங்கு வருகை தருவதும் சிறந்தது.

அலிபாக் மும்பையிலிருந்து வெறும் 30 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது ஒரு சிறப்பு. விமானம், ரயில், சாலை என்று எப்படி வேண்டுமானாலும் அலிபாக் பயணத்திற்கு திட்டமிட்டுக்கொள்ளலாம். விமான மார்க்கம் என்றால் மும்பை சர்வதேச விமானம் அருகிலேயே உள்ளது. ரயிலில் வர விரும்பினால் பென் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசுப்பேருந்துகளும் மஹாராஷ்டிராவின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநில நகரங்களிலிருந்தும் இயக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை பெற மும்பை ஜெட்டியிலிருந்து அரபிக்கடல் வழியாக 'ஃபெர்ரி' சேவை மூலம் அலிபாக்கிற்கு பயணம் செய்யலாம்.

ஒரு வார இறுதி விடுமுறையை அலிபாக் பகுதியில் கழிக்கும் அனுபவம் எந்த விதமான சுற்றுலாப்பயணியின் சுற்றுலா வேட்கைக்கும் தீனி போடக்கூடியதாகும். மஹாராஷ்டிராவின் கோவா என்றழைக்கப்படும் இந்த அலிபாக் கடற்கரை ரசிகர்களுக்கான ஒரு விருப்ப நகரமாக உருவாகியுள்ளது. இன்னும் காலத்தைக் கடத்தாமல் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஒரு வார இறுதி விடுமுறையை அலிபாக்கில் கழிக்கப் புறப்படுங்கள். வாழ்நாள் முழுவதும் இந்த சிறு கடற்கரை நகரம் அளித்திட்ட பரவசத்தை உங்களால் மறக்கவே முடியாது.