கடற்கரைக்கு பெயர் போன கோவாவின் சிறந்த 2 கடற்கரைகள்!!

அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும்.

அரம்போள் பீச்சின் அருகாமை பகுதிகளில் உள்ள மணி ஸ்டோன் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் பயணிகளிடையே மிகப்பிரபலம். அரம்போள் பீச்சில் பரபரப்புக்கு எப்போதும் வேலையே கிடையாது. இதன் காரணமாகவே காலாற நடந்துலாவும் இன்பத்தை அனுபவிக்க இந்த கடற்கரைக்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வருகிறார்கள்.

பனாஜியிலிருந்து, மாபுஸா செல்லும் பேருந்துகளின் மூலம் நீங்கள் சுலபமாக அரம்போள் பீச்சை அடையலாம். அதுமட்டுமல்லாமல் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப வாடகை கார்களிலேயோ, ஆட்டோ ரிக்ஷாக்களிலேயோ அரம்போள் பீச்சுக்கு செல்லலாம்.

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரை அரோசிம் பீச். இங்கு எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

இந்தக் கடற்கரையில் இருக்கக்கூடிய ஒரு சில குடில்களில் சுவையான கோவா உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம். மேலும் கடற்கரையை ஒட்டி நிறைய 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன. கோவா விமான நிலையம் மற்றும் பனாஜி நகரிலிருந்து முறையே 22 மற்றும் 35 கிலோமீட்டர் தொலைவில் அரோசிம் பீச் அமைந்திருக்கிறது. எனவே வாடகை கார்கள் மூலம் அரோசிம் கடற்கரையை சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு அரோசிம் கடற்கரைக்கு அருகில் சில ரயில் நிலையங்கள் இருக்கின்றன. மேலும், பைக்கை வேண்டுமானாலும் ஒருவர் வாடைகைக்கு எடுத்துக் கொண்டு அரோசிம் கடற்கரைக்கு செல்லலாம்.