உலகம் சுற்றிப்பார்க்க ஆசைப்படுபவர்கள் இலவசப் பயணங்களை மேற்கொள்ள சில யோசனைகள்

சுற்றுலா குறித்து ப்ளாக் எழுதுவது இன்றைய ட்ரெண்ட் ஆகும். சுற்றுலா மற்றும் அது சார்ந்த அத்தனைத் தகவல்களையும் நீங்கள் ப்ளாக் மூலமாக எழுதலாம். உங்கள் எழுத்துத் திறமையைப் பொறுத்து பல சுற்றுலா நிறுவனங்களும் இலவசப் பயணங்களை ஏற்படுத்தி உங்களுக்கு ஊதியத்துடன் எழுதவும் வாய்ப்பு அளிக்கின்றன.

யோகா, மலையேற்றம், அலைச்சறுக்கு, ஸ்கூபா டைவிங், பாரா க்ளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்போருக்கு உலக நாடுகள் வலைவிரித்துக் காத்திருக்கின்றன. பகுதி நேர வேலையாகக் கூட இதைப் பல நாடுகளுக்கும் பயணித்து செய்யலாம். சீசனுக்கு ஏற்ப மட்டும் சர்வதேச ஹோட்டல்கள் இதற்கு பயிற்சியாளர்களை நியமிக்கிறார்கள்.

இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் இங்கிருக்கும் பணியாளர்கள் பணி மாற்று திட்டம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் அங்கிருந்து ஆட்கள் வருவதும் நடைமுறை. இது ஐடி வேலைக்கு மட்டுமல்ல கட்டுமானம், வீட்டு விலங்கு பாதுகாப்பு, விவசாயப் பணி, வீட்டு வேலை என அத்தனைக்கும் ஆட்கள் தேவை உள்ளது. இதன் மூலம் நாம் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ளவற்றை காண முடியும்.

சுற்றுலா பிரியர்கள் தங்களது பயணத்துக்கு மட்டும் செலவு செய்து இருப்பிடத்தை இலவசமாகப் பெற Couch Surfing உதவும். இந்த சேவை பல நாடுகளிலும் உள்ளது. இச்சேவை மூலம் ஒரு நாட்டில் நீங்கள் சுற்றிப்பார்க்கும் காலம் வரையில் இலவசமாகவே தங்கிக்கொள்ளலாம். இதற்கு வழிகாட்ட பல இணையதளங்கள் உள்ளன.

மொழி பயிற்றுவிப்பாளர்: உங்களுக்கு சர்வதேச மொழிகள் தெரியுமா? உதாரணமாக உங்களுக்கு ஆங்கிலம் கை வந்த கலை என்றால் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஆங்கிலம் கற்க விரும்புவோர் நேரடி உரையாடல்களை மேற்கொள்ள பயிற்சியாளர்களை விரும்புகிறார்களாம். Diverbo போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இதுபோன்ற தற்காலிக மொழி பயிற்சியாளர்களை அனுப்புகிறார்கள்.