மனதை கவர்ந்து இழுக்கும் கொல்லிமலை... குறைந்த செலவில் நிம்மதியாக சுற்றுலா செல்ல சிறந்த இடம்

நாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும்.

மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்’ அனுபவம். கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.

அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.

பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.