சுற்றுலா பயணிகளை மயக்கும் இயற்கை எழில் நிறைந்த ஆறுகள்!!

இயற்கை அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்க பல இடங்களுக்கு செல்கின்றனர். இந்த பதிவில் இந்தியாவின் முக்கிய 3 ஆறுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

சிந்து ஆறு
சிந்து நதி இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி லடாக் வழியாக பாய்ந்து காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பாய்ந்து பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா என 3 நாடுகளில் ஓடுகிறது. இதன் மொத்த நீளம் 3180 கிலோ மீட்டர்.

பிரம்மபுத்திரா ஆறு
பிரம்மபுத்ரா ஆறு சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. திபெத்திலுள்ள கயிலாய மலையில் 'ஸாங்-போ' என்ற பெயரில் ஆரம்பித்து நாம்சா- படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.

அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2900 கிலோ மீட்டர்.

கங்கை ஆறு
உத்திரகண்ட் மாநிலத்தின் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். கங்கோத்ரி பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு உள்ளிட்ட பனியாறுகள் இணைந்து பாகீரதி ஆறாக உருவெடுக்கிறது. இது கடல மட்டத்திலிருந்து 3892 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பாகீரதி நதியானது 205 கி.மீ. தூரம் பயணித்து தேவபிரயாக் என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கை நதியாக ஆகிறது. இங்கிருந்து இமயமலையின் குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக 250 கி.மீ. தூரம் பாய்ந்து ரிஷிகேஷ் மலைகளில் இருந்து வெளியேறி, ஹரித்வாரில் கங்கை சமவெளிப் பகுதிக்குள் நுழைகிறது.

கங்கை நதி, உத்திரகண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கதேச எல்லையை ஒட்டி ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து முறையே மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வங்கதேசம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை நதி 2525 கி.மீ. நீளத்திற்கு பயணிக்கிறது.