Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுக்கிறதா?

பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுக்கிறதா?

By: Nagaraj Mon, 09 Nov 2020 4:03:41 PM

பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுக்கிறதா?

தனியார் பள்ளிகள் கொடுக்கும் அழுத்தம்?... பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்டுவதற்கு, தனியார் பள்ளிகள் அழுத்தம் தருவதே காரணம் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்ததால், பெற்றோரின் கருத்துகளை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று (நவ.9) நடைபெறுகிறது.

இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தம் காரணமாகவே பள்ளிகள் திறப்பில் முனைப்பு காட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆரம்பம் முதலே நோய்த் தொற்றின் தீவிரம் பற்றிய கவலை இல்லாமல், வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இதற்காக பல்வேறு வழிகளில் கல்வித் துறைக்கும், அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் தருகின்றன.

opening of schools,security,corona,consultation,review ,பள்ளிகள் திறப்பு, பாதுகாப்பு, கொரோனா, ஆலோசனை, பரிசீலனை

அதன் விளைவாகவே, அக்டோபரில் பள்ளிகளை திறக்க அரசு முன்வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து, கல்வி ஆண்டு தாமதமாவது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவானது.

இந்நிலையில் கெதரோனா 2-வது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து, இம்மாத இறுதியில் நோயின் தீவிரத்தை அறிந்து, அதற்கேற்ப முடிவெடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பெற்றோரின் விருப்பத்தை அறிவதும் அவசியம் என்பதால், கருத்துக் கேட்பு கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்தது. இது தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பின்போது, பள்ளிகளை திறக்க பல பெற்றோர் வலியுறுத்துவதாக 80 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்தன.

அதேபோல, தற்போது நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகவே மாற்றிக்கொள்ளும். பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்கின்றன. இதனால், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இதுநோய்ப் பரவலுக்கு வழிவகுத்துவிடும். தவிர, அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 50 வயதை தாண்டியவர்கள். 40 வயதை கடந்தவர்களும் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|