Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை

By: Monisha Mon, 21 Dec 2020 2:20:28 PM

தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை

அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதியுடன் தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 16-வது சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரங்களில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணை பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே அவகாசம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஐந்து மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதான செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேமாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

politics,elections,party,electoral commission,consulting ,அரசியல்,தேர்தல்,கட்சி,தேர்தல் ஆணையம்,ஆலோசனை

இந்த ஆறு அதிகாரிகளில் சிலர் நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தனர். அவர்களை தமிழக தேர்தல் குழு அதிகாரிகள் வரவேற்றனர். இன்று பகல் 11.00 மணிக்கும், 12.00 மணிக்கும் மற்ற அதிகாரிகள் சென்னை வந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. முதலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலா இரண்டு பிரதிநிதிகள் வீதம் வந்து சந்திக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசினார்கள். தங்களது கருத்துக்களை மனுவாக அளித்தனர். தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகிய இருவரும் சென்றனர். அவர்களும் தி.மு.க.வின் கருத்துக்களை மனுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்தனர். காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் ஆர். தாமோதரன், வக்கீல் இணைய அமைப்பாளர் எஸ்.கே.நவாஸ் இருவரும் பங்கேற்றனர்.

politics,elections,party,electoral commission,consulting ,அரசியல்,தேர்தல்,கட்சி,தேர்தல் ஆணையம்,ஆலோசனை

பா.ஜனதா கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர்கள் எம்.என். ராஜா, சக்கரவர்த்தி இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் இருவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் என். பெரியசாமி, டி. மூர்த்தி கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளில் இருந்தும் தலா இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளுடனும், தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்கள். காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. நாளை 2-வது நாளாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை தலைமை செயலாளர், காவல்துறை இயக்குனர், அரசு துறைகளின் செயலாளர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகு நாளை மதியம் பத்திரிக்கையாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

Tags :
|