Advertisement

கொரோனா குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள சீனா

By: Nagaraj Mon, 08 June 2020 4:18:13 PM

கொரோனா குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள சீனா

கொரோனா விவகாரத்தில் வெள்ளை அறிக்கை... கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக வுகான் நகரில் தென்பட்டதாகத்தான் தகவல்கள் இதுவரை வெளிவந்தன. இப்போது 6 மாத காலத்தில் அந்த கொலைகார வைரஸ் தொற்று, பூமிப்பந்து முழுக்க கிட்டத்தட்ட ஆக்கிரமித்து விட்டது. 69 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 4 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பற்றி உண்மை தகவல்களை சீனா உடனே வெளியிடாமல் மூடி மறைத்ததால்தான் உலக நாடுகள் எல்லாம் கொடிய விலை கொடுத்து கொண்டிருக்கின்றன என்று அமெரிக்கா இன்றளவும் குற்றம் சுமத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை சீனா தனது நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும், ஆனால் அதை அந்த நாடு செய்யவில்லை என்பதுதான் அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது தீராக்கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

corona,white paper,china,world health organization ,கொரோனா, வெள்ளை அறிக்கை, சீனா, உலக சுகாதார நிறுவனம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி 6 மாதங்கள் ஓடிவிட்டன. இப்போதுதான் சீனா தனது நீண்ட மவுனத்தை கலைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அந்த நாடு வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. அது நீண்டதொரு விளக்கமாக அமைந்து இருக்கிறது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்...

கொரோனா வைரஸ் முதன்முதலாக வுகானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண்டறியப்பட்ட நாள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஆகும். நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விளைவுகளை பகுப்பாய்வு செய்து, அந்த கண்டுபிடிப்புகள் பற்றி ஆராய்வதற்கு உள்ளூர் அரசால் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொற்றுநோயியல் நிபுணர்கள், இது வைரஸ் நிமோனியா என கூறினர்.

தேசிய சுகாதார கமிஷன் ஏற்பாடு செய்த உயர் மட்ட அளவிலான நிபுணர்கள், இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒன்று என்பதை முதன் முதலாக ஜனவரி 19-ந் தேதி உறுதி செய்தனர். இந்த நாளுக்கு முன்பாக இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீன முன்னணி சுவாச நிபுணர் வாங் குவாங்பா தெரிவித்தார்.

corona,white paper,china,world health organization ,கொரோனா, வெள்ளை அறிக்கை, சீனா, உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையானது, கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவு அளித்தது.

சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணரான ஜாங் நன்ஷான், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று ஜனவரி 20-ந் தேதி உறுதி செய்தார். அந்த நேரத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 2 கேஸ்கள் இதை உறுதி செய்தன. சரியான நேரத்தில் சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், வைரஸ் பரவும் நிலவரம் குறித்து தெரியப்படுத்தப்பட்டது. வைரசின் மரபணு வரிசையும் வெளியிடப்பட்டது.

வுகானில் சமூக பரவல் மற்றும் கொத்து கொத்தாக பாதிப்பு வந்த பின்னர் சீனாவின் பிற பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. வுகானில் இருந்து அங்கு சென்றவர்களால்தான் இந்த வைரஸ் பரவியது. அதைத் தொடர்ந்து நாடளாவிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த வைரஸ் அறியப்படாத நிமோனியா என அடையாளம் காணப்பட்ட பின்னர் ஜனவரி 3-ந்தேதி முதல் சீனாவின் சுகாதார அமைப்புகள் ஒரு நாள் கழித்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவுக்கு மேலதிக விவரங்களை தெரிவிக்க தொடங்கின.

சர்வதேச சமூகம், இந்த வைரசுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒற்றுமை என்றால் வலிமை. இந்த போரில் உலகம் வெல்லும். இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது உலக சுகாதார நிறுவனம், பொதுவெளியில் புகழ்ந்துரைத்தாலும்கூட, உரிய நேரத்தில் சீனா தகவல்கள் தராததால் உலக சுகாதார நிறுவனம் ஏமாற்றம் அடைந்து விரக்தியை சந்தித்தது என்று சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்தான் சீனா இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Tags :
|
|