Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்ருட்டி வியாபாரி மர்ம மரணம்; சிசிடிவி ஆதாரங்கள் வெளியானது

பண்ருட்டி வியாபாரி மர்ம மரணம்; சிசிடிவி ஆதாரங்கள் வெளியானது

By: Nagaraj Wed, 18 Nov 2020 1:40:05 PM

பண்ருட்டி வியாபாரி மர்ம மரணம்; சிசிடிவி ஆதாரங்கள் வெளியானது

வெளியான வீடியோ ஆதாரம்... பண்ருட்டியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முந்திரி வியாபாரி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு, சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 30 ந்தேதி நடந்ததாக கூறப்படும் திருட்டு வழக்கிற்கு போலீசார் 28ந் தேதியே வியாபாரியை விசாரணைக்கு அழைத்து சென்றதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி செல்வமுருகன். 39 வயதான இவர் கடந்த 30 ந்தேதி ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களுடன் போராட்டத்தில் குதித்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

cashew trader,death,cpcit,investigation,video evidence ,முந்திரி வியாபாரி, மரணம், சிபிசிஐடி, விசாரணை, வீடியோ ஆதாரம்

சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் பண்ருட்டியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரேமா தனது கணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம் கிளை சிறையில் உள்ள காவலர்கள், விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்த வழக்கு தொடர்பாக போலீசாருக்கு எதிரான சிசிடிவி ஆதாரங்களையும், சாட்சிகளின் வீடியோக்களையும் வெளியிட்டார்.

அதில் முந்திரி வியாபாரம் செய்யும் செல்வமுருகன், நகை திருடியதாக கூறுவது பொய் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் அவரை கடந்த 28ந் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் 30ந் தேதி வரை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், நகை திருட்டு 30ந் தேதி நடந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் திருடப்பட்டதாக கூறப்படும் நகையை முன்னதாக 29- ஆம் தேதியே நகை கடை ஒன்றில் இருந்து காவலர் ஒருவர் வாங்கி சென்றதாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டார் வேல்முருகன்.

மேலும் இந்த நகையை வைத்து வியாபாரி செல்வமுருகன் மீது பொய்யான திருட்டு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் வேல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வீடியோ ஆதாரங்களை பெற்று விசாரணை நடத்தப்படும் எனவும், உண்மை தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி ஐஜி சங்கர் உறுதியளித்துள்ளார்.

Tags :
|
|