Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்களில் ஆடித் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் வேதனை

கோவில்களில் ஆடித் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் வேதனை

By: Nagaraj Wed, 22 July 2020 11:58:16 AM

கோவில்களில் ஆடித் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் வேதனை

ஆடித் திருவிழாக்கள் ரத்து... சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கோவில்களில் சித்திரைத் திருவிழாவைத் தொடர்ந்து ஆடித் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவில், வீரழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா களைகட்டும். திருக்கல்யாணம், தேரோட்டம், வைகையாற்றில் அழகர் இறங்குதல் என மானாமதுரையில் தொடர்ந்து 20 நாட்கள் வரை நடைபெறும்.

இத்திருவிழாவில் உள்ளூர் மக்கள் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் அவர்களது உறவுமுறைகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள். மானாமதுரை சித்திரைத் திருவிழா வைகையாற்றை மையமாக கொண்டு நடைபெறுவதால் ஆற்றுக்குள் திருவிழா கடைகள், பலவகை ராட்டினங்கள் அமைக்கப்படும்.

வைகையாற்றில் அழகர் இறங்கும் உற்சவத்தின்போதும் சித்திரை பெளர்ணமியன்று நடைபெறும் நிலாச்சோறு வைபவத்திலும் மானாமதுரை வைகையாற்றுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

manamadurai,temples,festivals canceled,tormented ,மானாமதுரை, கோவில்கள், திருவிழாக்கள் ரத்து, வேதனை

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் மானாமதுரை பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்த சித்திரைத் திருழாவுக்கு இந்தாண்டு கொரோனா தொற்று முட்டுக்கடை போட்டதால் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலிலும் வீரழகர் கோவிலிலும் சித்திரைத் திருவிழாக்கள் நடைபெறவில்லை.

சித்திரைத் திருவிழாதான் நடைபெறவில்லை, இக் கோவில்களில் வழக்கம்போல் ஆடித்திருவிழா நடைபெறும். அப்போது கண்குளிர சாமி தரிசனம் செய்யலாம் என எதிர்பார்த்து காத்திருந்த இப் பகுதி மக்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பிரச்னை முடிவுக்கு வராததால் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் நடைபெறவிருந்த ஆடித் திருவிழா வீரழகர் கோவிலில் நடைபெறவிருந்த ஆடிப் பிரமோற்சவ விழா என இரண்டு திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆடித் திருவிழாக்களிலும் மேற்கண்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மானாமதுரை பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Tags :